Wednesday, August 31, 2016

தங்கக் கல்லறை



அது அமெரிக்காவின் வண்மேற்கு. ஏதோ காற்றுகூட பற்றிக்கொண்டு எரிவதைப்போன்ற அனல்காற்று வீசும் அரிசோனாவின் சிறு நகரம். பெயர் பலோமிடோ. கொள்ளையர்களும் தங்க வேட்டையர்களும் சர்வ சாதாரணமாக சங்கமிக்கும் ஓர் இடம். அந்த நகரத்தின் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட தற்காலிக மார்ஷலாக வருபவர்தான் ராணுவ அதிகாரியான கேப்டன் டைகர்.

டைகரும் அவரது டெபுடியான குடிகார கிழவர் ஜிம்மியும் சீட்டு விளையாடும் வேலையில் குறுக்கே புகுகிறது ஒரு தோட்டா. இந்ந தோட்டாவின் காரணம் சலூனில் நடக்கும் சண்டையென்பதை அறிந்து அதை தடுக்கச்செல்கிறார் டைகர். அங்கே லக்னர் என்பவன் தங்கச்சுரங்கம் இருப்பதாக கூறி தன்னிடம் பணம்பறித்து ஏமாற்றிவிட்டதாகவும் அதனால் அவனை கொள்ளப்போவதாகவும் சொல்கிறான் பார்னட். இருவரையும் எச்சரித்து லக்னரை மட்டும் கைது செய்து சிறையில் அடைக்கிறார் டைகர். தங்கச்சுரங்கம் இருப்பது உண்மையென்றும் தன்னை விடுவித்தால் அதில் பாதியை டைகருக்கும் ஜிம்மிக்கும் தருவதாக லக்னர் கூறுகிறான். அன்று இரவு பார்னட் சில ஆட்களை அழைத்துக்கொண்டு லக்னரை போட்டுத்தள்ள மார்ஷல் அலுவலகத்திற்கு வருகிறான். ஆனால் கடைசி நேரத்தில் இதனை முறியடிக்கும் டைகர் அவர்கள் அணைவரையும் சிறையில் அடைக்கிறார்.

மறுநாள் காலை லக்னரை அழைத்துச் செல்ல வாரண்டுடன் வருகின்றனர் கோல் மற்றும் வாலி. இவர்கள் இருவரும் ஒரு வெகுமதி வேட்டையர்கள் ( பௌன்டி ஹன்டர்ஸ்). இவர்களுக்கு பயந்து கிழவன் ஜிம்மிக்கு புதையல் ஆசை காட்டி சிறையிலிருந்து ஜிம்மியுடன் தப்பிச்செல்கிறான் லக்னர். லக்னர் தப்பியதற்கு டைகரும் அவனது டெபுடியும்தான் காரணம் எனக்கூறிவிட்டு அவர்களை விரட்டிப்பிடிக்க வெகுமதி வேட்டையர்கள் விரைகின்றனர். தன்மேல் ஏற்பட்ட அவப்பெயரை துடைக்க டைகரும் கிளம்புகிறார்.
அந்த தங்கச்சுரங்கம் இருப்பது செவ்விந்தியர்களான அப்பாச்சேகளின் புனித பூமியில். அங்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் வந்ததில்லை என்று அப்பாச்சேக்கள் நம்புகின்றனர். அந்த இடத்தை காவல் காக்கின்றனர். இவர்கள் வெள்ளையர்களை கண்டாலே கொன்று அவர்களின் மண்டைத்தோலை உறித்துவிடுவார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் லக்னரும் ஜிம்மியும் தங்கத்தை எடுத்தார்களா, இவர்களை வெகுமதி வேட்டையர்கள் பிடித்தார்களா, கேப்டன் டைகர் இவர்களை பிடித்து தன் அவப்பெயரை துடைத்தாரா என்பதை இரு பாகங்களில் நமக்கு சொல்கிறது இந்த "தங்கக் கல்லறை " என்ற காமிக்ஸ் கதை. இந்தக்கதை முழுக்கவே பல திடீர் திருப்பங்களும் இறுதியில் ஒரு பயங்கர சஸ்பென்சும் நிறைந்த அட்டகாசமான காமிக்ஸாகும். கதையே இதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது. முழுவதும் சொன்னால் சுவாரஸ்யம் இருக்காது என்பதால் இத்துடன் நிறுத்திவிட்டேன். இதுதான் நான் முதன்முதலில் படித்த டைகர் கதையும்கூட.

0 Comments:

Post a Comment