Wednesday, August 31, 2016

A fistful of dollars



1929ல் டஷில் ஹமெட் என்பவர் ரெட் ஹார்வெஸ்ட் என்ற நாவலை எழுதினார். அதே ஆண்டுதான் இத்தாலியில் செர்ஜியோ லியோனி என்ற குழந்தையும் பிறந்தது.

ஜப்பான் சினிமாவின் பிதாமகர் அகிரா குரோசோவா இந்த நாவலை 1961ல் யோஜிம்போ என்ற பெயரில் ஒரு சாமுராய் திரைப்படமாக எடுத்தார். இந்த படத்தை பார்த்த செர்ஜியோ லியோனி இதே கதையை ஒரு கவ்பாய் திரைக்கதையாக மாற்றி எழுதி படமாக்க முயற்சி செய்தார். இவர் வளர்ந்து வரும் இத்தாலிய இளம் இயக்குனர். இந்தப்படத்தில் நடிக்க ஹென்றி ஃபான்டா என்ற ஹாலிவுட் நடிகர் பரிந்துரைக்கப்பட்டார். படத்தின் பட்ஜெட்டை விட இவர் அதிக சம்பளம் கேட்டதால் தூக்கப்பட்டார். அதனையடுத்து வந்த சார்லஸ் பிரான்சன் என்ற நடிகர், இந்த திரைக்கதையை சரியில்லையென்று காரிதுப்பிவிட்டு சென்றுவிட்டார். (ஆனால் பின்னர் இருவருமே லியோனியின் ஒன்ஸ் அபான் ய டைம் இன் த வெஸ்ட் திரைப்படத்தில் நடித்தனர் ) இதன் பின்னர் ரிச்சர்ட் ஹாரிசன் என்ற டீவி சீரியல் நடிகர் வந்தார். இவர் தன்னால் நடிக்க முடியாவிட்டாலும் தன் சக நடிகர் ஒருவரை இந்த படத்திற்கு பரிந்துரைத்துவிட்டு சென்று விட்டார். அந்த அமெரிக்க டீவி நடிகரின் பெயர் க்ளின்ட் ஈஸ்ட்வுட்.

கவ்பாய் என்றாலே என் நினைவுக்கு வரும் பெயர் க்ளின்ட் ஈஸ்ட்வுட்தான். ( நான் ஜான் வெய்னின் படங்களை பார்த்ததில்லை) அப்படி ஒரு அலட்டல் இல்லாத அலட்சியமான ஸ்டைலான நடிகர் . பிற்காலத்தில் ஆஸ்கார் விருதுபெரும் அளவுக்கு ( அதுவும் அன்ஃபர்கிவன் என்ற கவ்பாய் படம்தான்) புகழ் பெற்ற இயக்குனராகவும் ( தற்போதைய அமெரிக்கன் ஸ்னைப்பர் வரை) மாறியவர் ஈஸ்ட்வுட். இவரை தேர்வுசெய்தபின் தனது பள்ளித்தோழரான என்னியோ மார்கோனி என்ற இசையமைப்பாளரையும் சேர்த்துக்கொண்டு படப்பிடிப்ப ஆரம்பித்தார் லியோனி. 1964ல் டாலர்ஸ் ட்ரையாலஜியின் முதல் படமான எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ்( a fistful of dollars) வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இது 1968ல் அமெரிக்காவில் வெளியான பின்னர்தான் ஹாலிவுட் இந்த மூவரணியை அழைத்துக்கொண்டது.


மெக்ஸிகொ எல்லையில் உள்ள ஒரு சிறு நகரத்திற்கு தன்னந்தனியா குதிரையில் புதியவன் ஒருவன் வருகிறான். அவனை வழிமறிக்கும் மணியடிக்கும் ஆசாமி," நீ எந்ந கூட்டத்தை சேர்ந்தவன் , பணம் வச்சிருக்கியா பணம் இல்லனா இங்க நீ பொணமாகிடுவ அப்புறம் உனக்கும் நான்தான் மணியடிக்கனும் " என்று எச்சரிக்கிறான். நகரினுள் வரும் புதியவனை மூன்று பேர் வம்பிழுத்து அவன் குதிரையை வெகுண்டொடச் செய்கின்றனர். கடுப்பாகி சலூனிற்கு சரக்கடிக்க வரும் புதியவனிடம் உடனே இந்த இடத்தைவிட்டு போய்விடுமாறும் இல்லையேல் அந்த சவப்பெட்டி உனக்குதான் என்று சவப்பெட்டி செய்துகொண்டிருப்பவனை காட்டுகிறார் சலூனில் இருப்பவர். மேலும் அந்த ஊரை பேக்ஸ்டர் மற்றும் ரோஹோஸ் என்ற இரு குழுவினர் ஆட்டிப்படைப்பதையும் சொல்கிறார். இதில் பேக்ஸ்டர் அந்த ஊரின் ஸெரிஃப். ரோஹோஸ் & சகோதர்கள் கொலை கொள்ளை கடத்தல் ஆசாமிகள். அங்கிருந்து கிளம்பும் புதியவன் தன்னை வம்பிழுத்த நான்குபேரையும் போட்டுத்தள்ளிவிட்டு நேரே ரோஹோஸிடம் சென்று பிணத்தை காட்டி பணம் பெறுகிறான். ஏனெனில் இறந்த நால்வரும் ரோஹோஸின் எதிரியான பேக்ஸ்டர் குழுவினர். பின்னர் ரோஹோஸின் ஆட்களை கொன்றுவிட்டு பேக்ஸ்டரிடம் பணம் பெறுகிறான். இந்த இரு கூட்டத்திற்குள்ளேயே இருந்து கொண்டு அவர்களை அழித்து அந்த ஊரை புதியவன் எப்படி காப்பாற்றினான் என்பதை படத்த பார்த்து தெரிஞ்சிகங்க.

மேலே நான் நாயகனை புதியவன் என்று குறிப்பிட்டதன் காரணம் இந்த படத்திலும் இதனை தொடர்ந்து வந்த மற்ற இரு படங்களிலும் நாயகனுக்கு பெயரே கிடையாது. அதுதான் செர்ஜியோ லியோனியின் திறமை. படம் ஆரம்பிக்கும்போதே நம்மை முதலில் ஈர்ப்பது என்னியோ மார்கோனியின் தீம் மியூசிக்தான். படம் முழுக்க இவரது ராஜியம்தான். விசில் சப்தத்தை தீம் மியூசிக்காக மாற்றியதும் இவரே. 

0 Comments:

Post a Comment