Showing posts with label noval. Show all posts
Showing posts with label noval. Show all posts

Wednesday, August 31, 2016

6174




அது கணிக்கவே முடியாத ஒரு யுகம். லெமூரியா கண்டத்தின் ஒன்பது அடி உயர மனிதர்கள் சிலர் அங்கே நிற்கின்றனர். அவர்களின் முன்பு லெமூரியாவின் சக்தி பீடமான சிறிய பிரமிட் ஒன்று உள்ளது. பின்னால் தோன்றப்போகும் மோசமான மனித இனத்தின் கையில் அது கிடைக்கக்கூடாது என்பதற்காக அதை இரு பகுதியாக வெட்டி உலகின் இருவேறு பகுதிகளில் மறைத்துவிட்டு லெமூரியன்கள் அழிந்துவிடுகின்றனர்.

தற்காலத்தில் அந்த லெமூரியன் பிரமிடை தோடி பல குழுக்கள் அழைகின்றன. அதை அடைய ஏகப்பட்ட புதிர்களை அவிழ்க்கவேண்டியுள்ளது. கடைசியில் அந்த பிரமிட் என்ன ஆனது என்று இந்த 6174 என்ற கதையை படித்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு டாவின்ஸி கோட் நாவலும் திரைப்படமும் பிடிக்குமெனில் நிச்சயம் இந்த நாவலும் பிடிக்கும். சரி இந்த நாவலுக்கு ஏன் 6174 னு பெயர் வச்சாங்க. அதுக்கான காரணம் தெரியும்போது நீங்க வாய்பிளப்பது நிச்சயம். கணிதத்தில் இந்த 6174 நம்பரை ஒரு கருங்குழினு (Black hole) சொல்லப்படுவது ஏன்? விடை புக்கில்.

லெமூரியாவில் ஆரம்பிக்கும் கதை அமெரிக்கா, கொரியா, ரஷ்யா, சென்னை,கேரளா,காஞ்சிபுரம், மஹாராஷ்ட்ரா,ஒரிசா, பர்மானு கடைசில பெர்முடா முக்கோணத்துல வந்து முடியும்.
இந்த புக்க ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கியபோது ஆரம்ப இருபது பக்கங்களைகூட தாண்டமுடியல அவ்ளோ குழப்பமா இருந்தது. மூடிவச்சிட்டேன். நேற்று மறுபடிம் எடுத்து புரட்டினேன் இருபது பக்கங்களுக்கு பிறகு புக்கு என்னை புரட்டிபோட்டுவிட்டது அவ்ளோ வேகம். இந்த கதைய எழுதிய க.சுதாகருக்கு இதுதான் முதல் கதை.
வம்சி பதிப்பகம். விலை ரூபாய்.300.

Friday, June 13, 2014

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

மிஸ்டரி எனப்படும் மர்மமான விசயங்களை பற்றி படிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இதுபோன்ற படங்களையே நான் அதிகம் பார்த்துள்ளேன். அதில் ஒருவகையான ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகளைப்பற்றிய புத்தகம்தான் ராஜ்சிவா எழுதிய இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?.
இதில் உள்ள சில விசயங்களைப்பற்றி ஏற்கனவே சுஜாதாவும் மதனும் எழுதிவிட்டாலும் ராஜ்சிவா அளவுக்கு யாரும் டீடெய்லா எழுதவில்லை அதனாலேயே இந்த புத்தகம் எனக்கு பிடித்தும்விட்டது.
இந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்..
* இதுவரை உலகத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பயிர் வட்டங்கள் உருவாகி இருக்கின்றன.  அவற்றை உருவாக்குவது யார்? எப்படி? எதற்கு?
* பறக்கும் தட்டை பார்த்தவர்களின் சாட்சியம் மற்றும் புகைப்படம், வீடியோ ஆதாரங்கள்.
* பயிர்வட்டங்களின் மூலம் ஏலியன்கள் மனிதர்களுக்கு அனுப்பிய செய்தி என்ன?
*  2 மற்றும் 3 பரிமாணங்கள் தெரியும். நான்காவதாக காலத்தையும் சேர்த்து 4D தொழில்நுட்பத்தில் செய்யப்படும் டைம் ட்ராவல் சாத்தியமா?
* 11 பரிமாணங்கள் இருப்பதாக சொல்லப்படும் ஒரு தியரி.
* ஏலியன்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர்.
*  ரோஸ்வெல் நகரில் விபத்துக்குள்ளான பறங்கும் தட்டையும் அதில் இருந்த ஏலியனையும் மறைக்கும் அமெரிக்கா.
* பிரமிடுக்கும் ஏலியனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
* ஏலியன்கள் இருக்கா? இல்லையா? அவை பூமிக்கு வந்தது உண்மையா?
* ஏலியன்கள் என நாம் நம்புவது டைம் மெஷினில் வருகைபுரியும் நமது வருங்கல சந்ததியினரா?
* நம்மை படைத்தது ஏலியன்களா?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகள் இந்த புத்தகத்தில் உள்ளது. உயிர்மை இணைய இதழில் தொடர் கட்டுரையாக வந்ததை தொகுத்து உயிர்மை பதிப்பகத்தார் ரூபாய் 175க்கு வெளியிட்டுள்ளனர். சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத புத்தகம் இது.
             

Monday, July 15, 2013

நூலகம்-2

நாவல்களைப்போல் பெருத்தும் சிறுகதைகள் போல் சிறுத்தும் இல்லாமல் இவை இரண்டிற்குமிடையில் கட்டுரை வடிவில் சுவைபட கதைசொல்வதில் கைதேர்ந்த எழுத்தாளர் கார்டூனிஸ்ட் மதன்.இவரின் வந்தார்கள் வென்றார்கள் அணைவரும் அறிந்ததே, அதனால் இவரின் மற்ற நூல்களைபற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.

மனிதனும் மர்மங்களும்

அந்த பிரபல மனோதத்துவ மருத்துவர் தனது வழக்கமான நோயாளியை காண அந்த மருத்துவமணை வராண்டாவில் நடந்து கொண்டிருந்தார். எதிரில் வந்த ஒரு நர்ஸ் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு மறைந்துவிட்டார்(?!). இத்தனை வருடங்களில் அந்த நர்ஸை பார்த்திராத மருத்துவர் அவரைபற்றி விசாரித்தார். பல வருடங்களுக்கு முன்பே அந்த நர்ஸ் மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய உண்மை அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது. அப்புடினா அவர் பார்த்த அந்த அது? அதுவேதான்!
இதுபோன்ற பேய்கதைகளை சற்று பயந்துகொண்டே படிப்பது எனக்கு பிடித்தவிசயங்களில் ஒன்று. இதைப்போலவே பல 'பிரபல' பேய்கதைகள் இந்த புக்கில் உண்டு.

மனிதன் மல்லாக்க படுத்து வானத்தை பார்க்க ஆரம்பித்த அன்றுமுதல் இன்றுவரை தொடரும் ஒரு தொடர்கதை ஏலியன்.  ஹாலிவுட்டில் பொழப்பு ஓடுவதே இந்த பயபுள்ளைகளாலதான். பறக்கும் தட்டு முதல் பட்டர்ஃபிளை வரை வானத்தில் பார்த்தவர்கள் அனேகம்பேர் அமெரிக்காவில் இன்றும் உள்ளனர். ஏலியனை பேட்டி எடுத்தவர் ஏலியனுடன் சம்பந்தம் பேசியவர்னு இந்த புக்ல நிரையபேர் இருக்காங்க ஜாக்கிரதை.

ஒரு பொருளை கண்ணால்பார்த்தே நகர்த்தவோ வலைக்கவோ பறக்கவோ வைக்க முடியுமா? அப்படியும் ஒருவர் இருந்தார். அவர் பெயர் யூரி கெல்லர். இவரை பல மருத்துவர்கள் சோதனைசெய்து பார்த்ததில் அசந்துபோன ஒரு விசயம் இவர் தனது உயரத்தை கூட்டியும் குறைத்தும் காண்பித்ததுதான். இந்த வகையராக்களும் இதில் உண்டு.

என்னதான் மனிதன்  கிளிஜோசியத்திலிருந்து கம்ப்யூட்டர் ஜோசியத்திற்கு பரிணாமவளர்ச்சி அடைந்திருந்தாலும் இவை அணைத்தும் எதிர்காலத்தை தெரிந்துகொள்ளும் ஆசையையே காட்டுகிறது. பலநூரு ஆண்டுகள் கழித்து நடக்கப்போவதை முன்னரே எழுதிவைத்த மனிதர்களும் தன் மரணத்தை முன்பே தெரிந்துகொண்ட ஆப்ரஹாம் லிங்கனும் மற்றொறு அதிசய சிறுமியும் இந்நூலில் வருகின்றனர். முடிந்தால் அவர்களிடம் உங்கள் எதிர்காலத்தை கேட்டுபாருங்க. மொத்தத்தில் இதுஒரு ரகளையான கலவையான புக்

Sunday, June 23, 2013

நூலகம்

நாவல்களை நான் படிக்கத்தொடங்கிய காலத்தில் இந்திரா சவுந்தர்ராஜன்,ராஜேஷ்குமார் போன்றோரின் நாவல்களை படித்து முடிப்பதே எனக்கு பேரரசின் படங்களை முழுவதும் பார்ப்பதை போன்று கடினமாக இருந்தது. இந்நிலையில்தான் கல்கியின் பொன்னியின் செல்வனை படித்தேன் முடித்தேன். அன்றுமுதல் இந்நாவலை வருடத்திற்கு ஒருமுறை படிப்பதை வைபவமாய் வைத்திருக்கிறேன். சற்றே கிண்டலான  சுவாரஸ்யமான அவரது எழுத்துநடையும் விருவிருப்பான கதையோட்டமுமே அவ்வளவு பெரிய நாவலை படிக்கமுடிந்தது. அதன்பின்னர் இந்த வரலாற்று வழியில் படையெடுத்தவர் அனேகம்பேர், அதில் வெற்றிபெற்றவர் வெகுசிலரே. சுஜாதாகூட இதில் தோல்விதான். இதில் பிரபலமான சாண்டில்யனின் கடல்புறாகூட விஜய்காக எழுதப்பட்ட ஒரு திரைக்கதையை போலவே எனக்கு தோன்றுகிறது. ஆழ்வார்கடியானைப்போல் இந்த அனபாயச்சோழன் ஏனோ மனதில் ஒட்ட மறுக்கிறார். சரி அதைவிடுங்க நான் சொல்லவந்தது கவிஞர் மு.மேத்தா எழுதிய ஒரு அருமையான வரலாற்று நாவலைப்பற்றி.  1982ல் விகடன் பொன்விழா சரித்திர நாவல் போட்டியில் முதற்பரிசு வென்ற " சோழநிலா " தான் அந்நாவல்.

கதை நடக்கும் காலத்தில் வீரபாண்டியனுக்கும் குலசேகரபாண்டியனுக்குமிடையே மதுரையின் சிம்மாசனத்திற்கு ஒரு இசைநாற்காலி போட்டியே நடக்கிறது. இவர்களுக்கு ஆதரவாக இலங்காபுரி தண்டநாயகர்கள் இருவர் வந்து தமிழகத்தையே அதகளம் செய்கின்றனர். கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்ட சோழநாட்டில் டம்மி ராஜாவின் ஆட்சியை கலைக்க பல்வேறு சதிகளும் நடக்கிறது. இத்தகைய ஒரு சூழலில் ஈடுஇணையற்ற ராஜதந்திரமும் வீரமும் கொண்ட சோழநாட்டு தளபதி திருச்சிற்றம்பலமுடையான் பெருமான் நம்பி பல்லவராயர் ( எவ்ளோ சின்ன பேரு), எப்படி இந்த சதிகளையேல்லாம் முறியடித்து குழோத்துங்க சோழனை அரசனாக்கினார் என்பதே இந்நாவலின் கதை. ஒரு சரித்திர நாவலை எப்படி சஸ்பென்சா எழுதமுடியும்னு இந்த நாவலை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மு.மேத்தாவின் மற்றொறு அருமையான சரித்திர நாவல் "மகுடநிலா". இது பிற்கால சோழர்களின் பிரமாண்ட ஆட்சிக்கு முதன்முதலில் வித்திட்ட விஜயாலய சோழனும் அவன் மகன் ஆதித்தசோழனையும் பற்றியது.
இவ்விரு நாவல்களும் கவிதா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். ஆனால் தற்போது கிடைப்பது சந்தேகம்தான் மறுபதிப்பே இல்லையென நினைக்கிறேன். எட்டு வருடங்களுக்கு முன் நான் நூலகத்தில் படித்தபோது இப்பவோ அப்பவோ என உயிரைவிடும் நிலையில் இருந்தது. கதைமட்டும் இன்றும் உயிருடன் இருக்கிறது என்னுள்.