Friday, June 13, 2014

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

மிஸ்டரி எனப்படும் மர்மமான விசயங்களை பற்றி படிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இதுபோன்ற படங்களையே நான் அதிகம் பார்த்துள்ளேன். அதில் ஒருவகையான ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகளைப்பற்றிய புத்தகம்தான் ராஜ்சிவா எழுதிய இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?.
இதில் உள்ள சில விசயங்களைப்பற்றி ஏற்கனவே சுஜாதாவும் மதனும் எழுதிவிட்டாலும் ராஜ்சிவா அளவுக்கு யாரும் டீடெய்லா எழுதவில்லை அதனாலேயே இந்த புத்தகம் எனக்கு பிடித்தும்விட்டது.
இந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்..
* இதுவரை உலகத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பயிர் வட்டங்கள் உருவாகி இருக்கின்றன.  அவற்றை உருவாக்குவது யார்? எப்படி? எதற்கு?
* பறக்கும் தட்டை பார்த்தவர்களின் சாட்சியம் மற்றும் புகைப்படம், வீடியோ ஆதாரங்கள்.
* பயிர்வட்டங்களின் மூலம் ஏலியன்கள் மனிதர்களுக்கு அனுப்பிய செய்தி என்ன?
*  2 மற்றும் 3 பரிமாணங்கள் தெரியும். நான்காவதாக காலத்தையும் சேர்த்து 4D தொழில்நுட்பத்தில் செய்யப்படும் டைம் ட்ராவல் சாத்தியமா?
* 11 பரிமாணங்கள் இருப்பதாக சொல்லப்படும் ஒரு தியரி.
* ஏலியன்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர்.
*  ரோஸ்வெல் நகரில் விபத்துக்குள்ளான பறங்கும் தட்டையும் அதில் இருந்த ஏலியனையும் மறைக்கும் அமெரிக்கா.
* பிரமிடுக்கும் ஏலியனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
* ஏலியன்கள் இருக்கா? இல்லையா? அவை பூமிக்கு வந்தது உண்மையா?
* ஏலியன்கள் என நாம் நம்புவது டைம் மெஷினில் வருகைபுரியும் நமது வருங்கல சந்ததியினரா?
* நம்மை படைத்தது ஏலியன்களா?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகள் இந்த புத்தகத்தில் உள்ளது. உயிர்மை இணைய இதழில் தொடர் கட்டுரையாக வந்ததை தொகுத்து உயிர்மை பதிப்பகத்தார் ரூபாய் 175க்கு வெளியிட்டுள்ளனர். சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத புத்தகம் இது.
             

Friday, June 6, 2014

அமேஸிங் ஸ்பைடர் மேன்-2

எலக்ட்ரோ
இந்த திரைப்படத்தின் தலையாய வில்லனான எலக்ட்ரோவை பற்றி காமிக் புத்தகங்கள் என்ன சொல்கின்றன என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.
மேக்ஸ் டில்லியன் என்ற ஒரு எலக்ட்ரிக்கல் இஞ்ஜீனியர் கம் லயன்மேன் ஒருமுறை லயன்கம்பத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருக்கும் போது மின்னலால் தாக்கப்படுகிறார். அதன் பலனாக அவர் ஒரு நடமாடும் பேட்டரியைப் போல் செயல்பட்டு பல்வேறு நாசகாரியங்களை செய்கிறார். இதன் பின்னரே மேக்ஸ், எலக்ட்ரோ என அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் ஸ்பைடர் மேனுக்கு மட்டுமல்லாது டேர்டெவில், ஃபென்டாஸ்டிக் ஃபோர் பேன்றவர்களுக்கும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வில்லனாகிறார். பேதாதற்கு எக்ஸ் மேன் குரூப்பின் தலைமை வில்லனான மேக்னடோவின்  சீடர்களுள் இந்த எலக்ட்ரோவும் ஒருவன்.
இனி படத்தை பார்ப்போம்.
ரிச்சர்ட் பார்கரும் அவர் மனைவியும் சிறுவனான பீட்டர் பார்க்கரை சித்தப்பா பென் பார்க்கரிடம் விட்டுவிட்டு ஒரு தனி விமானத்தில் நாட்டைவிட்டே செல்கின்றனர். அந்த விமானத்தில் உள்ள ஒருவனால் இருவரும் சுடப்பட்டு இறக்கும் தருவாயில் ஏதோ ஒரு ஃபைலை தனது லேப்டாப்பிலிருந்து அப்லோட் செய்துவிட்டு இறக்கிறார்.
நிகழ்காலத்தில், புளுடோனியத்தை கடத்திச்செல்லும் ஒரு கும்பலை மடக்கிப்பிடிக்கும் அட்டகாசமான ஆரம்பத்துடன் அறிமுகமாகிறார் ஸ்பைடர்மேன். அந்த களோபரத்தின் நடுவே ஆஸ்கார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் இஞ்ஜினியரான மேக்ஸ் டில்லியனை காப்பாற்றுகிறார். இதன் பின்னர் ஆஸ்கார்ப் டவரில்  ஏற்படும் ஒரு மின்சார பழுதை சரிசெய்ய செல்லும் மேக்ஸ் எதிர்பாராதவிதமாக ஷாக் அடித்து எலக்ட்ரிக் ஈல்கள் ( மின்சார மீன்கள்) இருக்கும் தொட்டியில் விழுந்துவிடுகிறார். இதனால் எலக்ட்ரிக்கல் பவரை கட்டுப்படுத்தும் எலக்ட்ரோவாக உருவெடுத்து வில்லனாகிறார்.
இதற்கிடையில் ஆஸ்கார்ப் நிறுவனத்தின் தலைவரான நார்மன் மரணப்படுக்கையில் தனது மகனான ஹாரியை அழைத்து தனக்கு வந்திருக்கும் பரம்பரை வியாதி ஹாரிக்கும் வருமென்றும் அதிலிருந்து மீள இது உதவுமென்று ஒரு சிறிய வஸ்துவை கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறார். அந்த நோயினை குணப்படுத்த ஸ்பைடர்மேனின் ரத்தம் தேவைப்படுகிறது. தரமறுக்கும் ஸ்பைடர் மேனுக்கு கிரீன் கோப்ளின் என்ற பயங்கர வில்லனாக மாறுகிறான் ஹாரி.
இந்த இருவரிடமிருந்து மக்களை எவ்வாறு ஸ்பைடர் மேன் தனது காதல் காட்சிகளுக்கு இடையே காப்பாற்றுகிறார் என்பதை திரையில் காணுங்கள்.
இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இதன் 3D எஃபெக்ட்தான்.  ஸ்பைடர் மேன் பறப்பதை இப்படித்தான் காட்டவேண்டும். படம் ரொம்பவே மெதுவாக செல்வதால் எல்லாருக்கும் பிடிக்கும் என சொல்லமுடியாது. எனக்கு பிடித்திருந்தது. படத்தின் கடைசியில் ரினோ என்ற பெரிய ரோபோ தாக்க வருகையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சென்டிமென்ட் காட்சி கனகச்சிதமாக எடுக்கப்பட்டிருக்கும். இந்த படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சியும் அதுதான்.
இந்த படத்தின் தொடர்ச்சியாய் 2016 ல் இதன் மூன்றாம் பாகமும் 2018ல் நான்காம் பாகமும் வர இருக்கிறது. அதில் சினிஸ்டர் சிக்ஸ் எனப்படும் வில்லன்கள் அடங்கிய குழுவும் உள்ளது. மேலும் அடுத்த பாகங்களில் ஸ்பைடர் மேனின் புதிய காதலி மேரி ஜேனாக இருக்கப் போகிறாள். அதுவரை ஸ்பைடர் மேனுடம் சேர்ந்து நீங்களும் காத்திருங்கள்.
                  .