Wednesday, August 31, 2016

டமால்-டுமீல்-2





கேப்டன் டைகரின் ஒரு கதையை பார்ப்போம். இது நான்கு பாகங்கள் கொண்ட புயல்வேக கதை.

பாகம்.1.இரும்புக்கை எத்தன்

1867ல் அமெரிக்காவில் அட்லாண்டிக்கையும் பசிபிக்கையும் இணைக்கும் வரலாறுகாணாத மாபெரும் இரயில் பாதை அமைக்கும் பணியில் இரு வேறு கம்பெனிகள் கடந்த பதினைந்து மாதங்களாக ஈடுபட்டு வந்தன. கிழக்கிலிருந்து பாதை அமைத்து வந்த யூனியன் பஸிபிக் கம்பெனியின் நிர்வாகி ஜெனரல் டாட்ஜ். இவர் கேப்டன் டைகரின் முன்னால் கமாண்டிங் ஆபீஸர். மேற்கிலிருந்து பாதை அமைத்து வருவது சென்ட்ரல் பஸிபிக் கம்பெனி. இந்த கம்பெனி தங்களது போட்டியாளர்களான யூனியன் பஸிபிக்கின் வேலையை தடுத்து நிறுத்த பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டது. யூனியன் பஸிபிகின் இரயில் பாதை செவ்விந்தியர்களான சியோக்ஸ்களின் வேட்டை நிலங்களின் வழியாக செல்வதால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜெனரல் டாட்ஜால், கேப்டன் டைகர் அழைக்கப்படுகிறார். ரெட் மற்றும் கிழவன் ஜிம்மி ஆகியோருடன் அந்த நகருக்கு வரும் டைகர், ஒரு கையில் இரும்புக்கரம் பொருத்திய ஸ்டீல் ஃபிங்கர் என்பவனுடன் சிறிய மோதல் ஏற்படுகிறது. தக்க சமயத்தில் அங்கு வரும் ஜெனரல் டாட்ஜ், ஸ்டீல் ஃபிங்கரை கைது செய்து டைகரை செவ்விந்தியர்களிடம் அணுப்புகிறார்.
 
செவ்விந்தியர்களின் உணவாதாரமான எருமைகளை யாரோ கொன்று குவித்து அவர்களின் கோபத்தை கூட்டியிருந்தனர். சியோக்ஸ்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சமயத்தில் சிறையிலிந்து தப்பி வந்த ஸ்டீல்ஃபிங்கர், டைகரின் ஆட்களைபோல வேடமணிந்து சியோக்ஸ்களின் தளபதியை போட்டுத்தள்ளிவிட்டு ஓடிவிடுகின்றனர். போச்சுவார்த்தைக்கு வரச்செய்து ஏமாற்றியதாக கொலை வெறி கொள்ளும் செவ்விந்தியர்களிடமிருந்து டைகரும் இரயில்வே ஊழியர்களும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் இந்த முதல் பாக கதை.

பாகம்.2. பரலோகப் பாதை

ஜெனரல் டாட்ஜின் இரயில்வே முகாம் சில மைல் தொலைவில் செவ்விந்தியர்களால் சுற்றிவளைக்கப் பட்டிருக்கிறது. அவர்களின் உணவு சேமிப்பு குடோனும் ஒற்றனால் தீயிடப்படுகிறது. பாதுகாப்பிற்கும் குறைவான ஆட்கள். இரண்டுவார சம்பள பாக்கியினால் இரயில் பாதை ஊழியர்கள் விரக்தியில் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் சற்று தொலைவில் உள்ள யூனியன் பஸிபிக்கின் ஸ்டேசன் அதிகாரியிடம் உதவி கோட்க செல்கிறது டைகர் & கோ.
அங்கு இரண்டு பக்கமும் இஞ்ஜின் பொருத்தப்பட்ட ஒரு இரயிலில் ஜெனரல் டாட்ஜ் முகாமிற்கு தேவையான உணவு, வெடிமருந்துகள், துப்பாக்கிகள், பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பள பணமான இரண்டு லட்சம் டாலர்கள் ஆகியவை எடுத்துவரப்படுகிறது. இதனை அறிந்த ஸ்டீல் ஃபிங்கர் செவ்விந்தியர்களுடன் ஒரு திட்டம் தீட்டுகிறான். அதன்படி இரயிலை தாக்கி ஆயுதங்கள் செவ்விந்தியர்களுக்கு பணம் ஸ்டீல் ஃபிங்கர் குழுவிற்கு. அதற்காக தண்டவாளத்தை தகர்த்தும் பாலத்தை வெடி வைத்தும் தகர்த்து விடுகின்றனர்.இதில் பணத்துடன் ஆற்றில் குதித்து தப்பிவிடுகிறார் டைகர். பணத்தை புதைத்துவிட்டு டைகர் முகாமிற்கும் ரெட்டும் ஜிம்மியும் ஸ்டேசனிற்கும் செல்கின்றனர்.

பாகம்.3.இரத்தத் தடம்.

பணத்தை திருடிவிட்டதாக பழி டைகர் மீது விழுகிறது. மேழும் செவ்விந்திய, ஸ்டீல் ஃபிங்கர் குழுவிடமும் மாட்டிக்கொள்கிறார். இவர்களிடமிருந்து தப்பி தன் அவப்பெயரை எவ்வாறு டைகர் துடைக்கிறார் என்பதை இந்த பாகத்தில் காணலாம்.

பாகம்.4. தலைகேட்ட தங்கத் தலையன்.

ஜெனரல் அலிஸ்டர் என்பவன் இந்த செவ்விந்தியர்களின் முற்றுகையை அறிந்து அவர்களை ஒழிக்க ஒரு பெரும் படையுடன் வருகிறான். இவன் ஒரு கருணையே இல்லாத போர் வெறியன். இந்த கடைசி பாகம் முழுக்க போர்தான். அமெரிக்க செவ்விந்திய போரை நாம் நேரில் நின்று பார்ப்பதை போன்ற ஒரு உணர்வை ஒவ்வொரு பக்கத்திலும் பார்க்கலாம்.

இதைப்போன்ற ஒரு வேகமான கதையை இதுவரை நான் படித்ததே இல்லை. சென்ட்ரல் பஸிபிக் கம்பெனியின் கைக்கூலியான ஸ்டீல் ஃபிங்கர் போடும் ஒவ்வொரு திட்டத்தையும் டைகர் முறியடிப்பதை படு புத்திசாலித்தனமா காட்டியிருப்பார்கள். இரயில் சேஸிங், போர் காட்சி, அட்டகாசமான வில்லன் என்று ஒரு கவ்பாய் வெர்ஸ்டன் ஆக்ஸன் படத்திற்கு தேவையான அணைத்தும் பொருந்திய ஒரு அருமையான காமிக்ஸ் கதை இது.


0 Comments:

Post a Comment