Wednesday, August 31, 2016

6174




அது கணிக்கவே முடியாத ஒரு யுகம். லெமூரியா கண்டத்தின் ஒன்பது அடி உயர மனிதர்கள் சிலர் அங்கே நிற்கின்றனர். அவர்களின் முன்பு லெமூரியாவின் சக்தி பீடமான சிறிய பிரமிட் ஒன்று உள்ளது. பின்னால் தோன்றப்போகும் மோசமான மனித இனத்தின் கையில் அது கிடைக்கக்கூடாது என்பதற்காக அதை இரு பகுதியாக வெட்டி உலகின் இருவேறு பகுதிகளில் மறைத்துவிட்டு லெமூரியன்கள் அழிந்துவிடுகின்றனர்.

தற்காலத்தில் அந்த லெமூரியன் பிரமிடை தோடி பல குழுக்கள் அழைகின்றன. அதை அடைய ஏகப்பட்ட புதிர்களை அவிழ்க்கவேண்டியுள்ளது. கடைசியில் அந்த பிரமிட் என்ன ஆனது என்று இந்த 6174 என்ற கதையை படித்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு டாவின்ஸி கோட் நாவலும் திரைப்படமும் பிடிக்குமெனில் நிச்சயம் இந்த நாவலும் பிடிக்கும். சரி இந்த நாவலுக்கு ஏன் 6174 னு பெயர் வச்சாங்க. அதுக்கான காரணம் தெரியும்போது நீங்க வாய்பிளப்பது நிச்சயம். கணிதத்தில் இந்த 6174 நம்பரை ஒரு கருங்குழினு (Black hole) சொல்லப்படுவது ஏன்? விடை புக்கில்.

லெமூரியாவில் ஆரம்பிக்கும் கதை அமெரிக்கா, கொரியா, ரஷ்யா, சென்னை,கேரளா,காஞ்சிபுரம், மஹாராஷ்ட்ரா,ஒரிசா, பர்மானு கடைசில பெர்முடா முக்கோணத்துல வந்து முடியும்.
இந்த புக்க ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கியபோது ஆரம்ப இருபது பக்கங்களைகூட தாண்டமுடியல அவ்ளோ குழப்பமா இருந்தது. மூடிவச்சிட்டேன். நேற்று மறுபடிம் எடுத்து புரட்டினேன் இருபது பக்கங்களுக்கு பிறகு புக்கு என்னை புரட்டிபோட்டுவிட்டது அவ்ளோ வேகம். இந்த கதைய எழுதிய க.சுதாகருக்கு இதுதான் முதல் கதை.
வம்சி பதிப்பகம். விலை ரூபாய்.300.

For a few dollars more



கலோனல் டக்லஸ் என்பர் ராணுவத்தில் வேலை செய்து தற்போது ஒரு வெகுமதி வேட்டையராக இருப்பவர். வைல்டு வெஸ்டிலேயே இவரளவுக்கு குறிவைத்து சுடுவதில் வல்லவர் எவரும் இல்லை. இவர் பலபேரை பரலோகம் அணுப்பிவிட்டு எல் இன்டியோ என்பவனை தேடி எல் பாஸியோ என்ற சிறு நகரத்திற்கு வருகிறார். தன் சம்பாதித்த பணத்தை எல்லாம் அந்த ஊரில் உள்ள பாங்கில் போடுகிறார். பாங்கின் பாதுகாப்பை உறுதிபடுத்த அதன் பெட்டகத்தை பற்றி மேனேஜரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார்.

இந்த எல் இன்டியோ என்பவன் படு பயங்கர சைக்கோ வில்லன். சமீபத்தில்தான் ஜெயிலையே தரைமட்டமாக்கிவிட்டு தப்பி வந்தவன். இவனுக்கும் இவன் கூட்டத்தாருக்கும் அரசாங்கம் வைத்திருக்கும் விலை இருபதாயிரம் டாலர்.

இந்த சூழ்நிலையில்தான் மழையில் நணைந்துகொண்டு தனது குதிரையை பிடித்துக்கொண்டு நடந்துவரும் ஒரு நெடிய உருவம் நமக்கு காட்டப்படும். சிகரெட்டை வாயில் வைத்து தீக்குச்சியை தனது தொடையில் உரசி பற்றவைத்துக்கொண்டே மெதுவாக நிமிரும் அந்த உருவம் , பெயரே இல்லாத நம்ம நாயகன்தான். அவனும் ஒரு வெகுமதி வேட்டையன். வில்லனை பிடிக்கவே அங்கு வந்திருக்கிறான். ஒரு நாள் பேங்கை கொள்ளையடிக்க எல் இன்டியோவின் ஆட்கள் வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்து அவர்களின் கூட்டத்தில் சேர்ந்துகொள்கிறான் நாயகன். கொள்ளையடித்த பெட்டகத்தை திறந்து தருவதன்மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுகிறார் டக்லஸ். இந்த இருவரில் யார் வில்லனை பிடிக்கிறாங்க என்பதை நமக்கு செம விறுவிறுப்பாக சொல்வதுதான் டாலர்ஸ் ட்ரையாலஜியின் இரண்டாவது படமாக 1965ல் வெளிவந்த இந்த ஃபார் எ ஃபியூ டாலர்ஸ் மோர் திரைப்படமாகும்.

இந்த டாலர்ஸ் ட்ரையாலஜி படங்களின் தீம் மியூசிக்க ஒரே ஒரு முறை கேட்டுவிட்டால் அதன் பின்னர் உங்களால அத மறக்கவே முடியாது. அதான் என்னியோ மார்கோனி. எம்ஜியார் காலத்தில் எடுக்கப்பட்ட படம் இன்னைக்கும் நமக்கு பிடிக்குதுனா அந்த படத்தை பற்றி என்ன சொல்றது?..

A fistful of dollars



1929ல் டஷில் ஹமெட் என்பவர் ரெட் ஹார்வெஸ்ட் என்ற நாவலை எழுதினார். அதே ஆண்டுதான் இத்தாலியில் செர்ஜியோ லியோனி என்ற குழந்தையும் பிறந்தது.

ஜப்பான் சினிமாவின் பிதாமகர் அகிரா குரோசோவா இந்த நாவலை 1961ல் யோஜிம்போ என்ற பெயரில் ஒரு சாமுராய் திரைப்படமாக எடுத்தார். இந்த படத்தை பார்த்த செர்ஜியோ லியோனி இதே கதையை ஒரு கவ்பாய் திரைக்கதையாக மாற்றி எழுதி படமாக்க முயற்சி செய்தார். இவர் வளர்ந்து வரும் இத்தாலிய இளம் இயக்குனர். இந்தப்படத்தில் நடிக்க ஹென்றி ஃபான்டா என்ற ஹாலிவுட் நடிகர் பரிந்துரைக்கப்பட்டார். படத்தின் பட்ஜெட்டை விட இவர் அதிக சம்பளம் கேட்டதால் தூக்கப்பட்டார். அதனையடுத்து வந்த சார்லஸ் பிரான்சன் என்ற நடிகர், இந்த திரைக்கதையை சரியில்லையென்று காரிதுப்பிவிட்டு சென்றுவிட்டார். (ஆனால் பின்னர் இருவருமே லியோனியின் ஒன்ஸ் அபான் ய டைம் இன் த வெஸ்ட் திரைப்படத்தில் நடித்தனர் ) இதன் பின்னர் ரிச்சர்ட் ஹாரிசன் என்ற டீவி சீரியல் நடிகர் வந்தார். இவர் தன்னால் நடிக்க முடியாவிட்டாலும் தன் சக நடிகர் ஒருவரை இந்த படத்திற்கு பரிந்துரைத்துவிட்டு சென்று விட்டார். அந்த அமெரிக்க டீவி நடிகரின் பெயர் க்ளின்ட் ஈஸ்ட்வுட்.

கவ்பாய் என்றாலே என் நினைவுக்கு வரும் பெயர் க்ளின்ட் ஈஸ்ட்வுட்தான். ( நான் ஜான் வெய்னின் படங்களை பார்த்ததில்லை) அப்படி ஒரு அலட்டல் இல்லாத அலட்சியமான ஸ்டைலான நடிகர் . பிற்காலத்தில் ஆஸ்கார் விருதுபெரும் அளவுக்கு ( அதுவும் அன்ஃபர்கிவன் என்ற கவ்பாய் படம்தான்) புகழ் பெற்ற இயக்குனராகவும் ( தற்போதைய அமெரிக்கன் ஸ்னைப்பர் வரை) மாறியவர் ஈஸ்ட்வுட். இவரை தேர்வுசெய்தபின் தனது பள்ளித்தோழரான என்னியோ மார்கோனி என்ற இசையமைப்பாளரையும் சேர்த்துக்கொண்டு படப்பிடிப்ப ஆரம்பித்தார் லியோனி. 1964ல் டாலர்ஸ் ட்ரையாலஜியின் முதல் படமான எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ்( a fistful of dollars) வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இது 1968ல் அமெரிக்காவில் வெளியான பின்னர்தான் ஹாலிவுட் இந்த மூவரணியை அழைத்துக்கொண்டது.


மெக்ஸிகொ எல்லையில் உள்ள ஒரு சிறு நகரத்திற்கு தன்னந்தனியா குதிரையில் புதியவன் ஒருவன் வருகிறான். அவனை வழிமறிக்கும் மணியடிக்கும் ஆசாமி," நீ எந்ந கூட்டத்தை சேர்ந்தவன் , பணம் வச்சிருக்கியா பணம் இல்லனா இங்க நீ பொணமாகிடுவ அப்புறம் உனக்கும் நான்தான் மணியடிக்கனும் " என்று எச்சரிக்கிறான். நகரினுள் வரும் புதியவனை மூன்று பேர் வம்பிழுத்து அவன் குதிரையை வெகுண்டொடச் செய்கின்றனர். கடுப்பாகி சலூனிற்கு சரக்கடிக்க வரும் புதியவனிடம் உடனே இந்த இடத்தைவிட்டு போய்விடுமாறும் இல்லையேல் அந்த சவப்பெட்டி உனக்குதான் என்று சவப்பெட்டி செய்துகொண்டிருப்பவனை காட்டுகிறார் சலூனில் இருப்பவர். மேலும் அந்த ஊரை பேக்ஸ்டர் மற்றும் ரோஹோஸ் என்ற இரு குழுவினர் ஆட்டிப்படைப்பதையும் சொல்கிறார். இதில் பேக்ஸ்டர் அந்த ஊரின் ஸெரிஃப். ரோஹோஸ் & சகோதர்கள் கொலை கொள்ளை கடத்தல் ஆசாமிகள். அங்கிருந்து கிளம்பும் புதியவன் தன்னை வம்பிழுத்த நான்குபேரையும் போட்டுத்தள்ளிவிட்டு நேரே ரோஹோஸிடம் சென்று பிணத்தை காட்டி பணம் பெறுகிறான். ஏனெனில் இறந்த நால்வரும் ரோஹோஸின் எதிரியான பேக்ஸ்டர் குழுவினர். பின்னர் ரோஹோஸின் ஆட்களை கொன்றுவிட்டு பேக்ஸ்டரிடம் பணம் பெறுகிறான். இந்த இரு கூட்டத்திற்குள்ளேயே இருந்து கொண்டு அவர்களை அழித்து அந்த ஊரை புதியவன் எப்படி காப்பாற்றினான் என்பதை படத்த பார்த்து தெரிஞ்சிகங்க.

மேலே நான் நாயகனை புதியவன் என்று குறிப்பிட்டதன் காரணம் இந்த படத்திலும் இதனை தொடர்ந்து வந்த மற்ற இரு படங்களிலும் நாயகனுக்கு பெயரே கிடையாது. அதுதான் செர்ஜியோ லியோனியின் திறமை. படம் ஆரம்பிக்கும்போதே நம்மை முதலில் ஈர்ப்பது என்னியோ மார்கோனியின் தீம் மியூசிக்தான். படம் முழுக்க இவரது ராஜியம்தான். விசில் சப்தத்தை தீம் மியூசிக்காக மாற்றியதும் இவரே. 

டமால்-டுமீல்-2





கேப்டன் டைகரின் ஒரு கதையை பார்ப்போம். இது நான்கு பாகங்கள் கொண்ட புயல்வேக கதை.

பாகம்.1.இரும்புக்கை எத்தன்

1867ல் அமெரிக்காவில் அட்லாண்டிக்கையும் பசிபிக்கையும் இணைக்கும் வரலாறுகாணாத மாபெரும் இரயில் பாதை அமைக்கும் பணியில் இரு வேறு கம்பெனிகள் கடந்த பதினைந்து மாதங்களாக ஈடுபட்டு வந்தன. கிழக்கிலிருந்து பாதை அமைத்து வந்த யூனியன் பஸிபிக் கம்பெனியின் நிர்வாகி ஜெனரல் டாட்ஜ். இவர் கேப்டன் டைகரின் முன்னால் கமாண்டிங் ஆபீஸர். மேற்கிலிருந்து பாதை அமைத்து வருவது சென்ட்ரல் பஸிபிக் கம்பெனி. இந்த கம்பெனி தங்களது போட்டியாளர்களான யூனியன் பஸிபிக்கின் வேலையை தடுத்து நிறுத்த பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டது. யூனியன் பஸிபிகின் இரயில் பாதை செவ்விந்தியர்களான சியோக்ஸ்களின் வேட்டை நிலங்களின் வழியாக செல்வதால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜெனரல் டாட்ஜால், கேப்டன் டைகர் அழைக்கப்படுகிறார். ரெட் மற்றும் கிழவன் ஜிம்மி ஆகியோருடன் அந்த நகருக்கு வரும் டைகர், ஒரு கையில் இரும்புக்கரம் பொருத்திய ஸ்டீல் ஃபிங்கர் என்பவனுடன் சிறிய மோதல் ஏற்படுகிறது. தக்க சமயத்தில் அங்கு வரும் ஜெனரல் டாட்ஜ், ஸ்டீல் ஃபிங்கரை கைது செய்து டைகரை செவ்விந்தியர்களிடம் அணுப்புகிறார்.
 
செவ்விந்தியர்களின் உணவாதாரமான எருமைகளை யாரோ கொன்று குவித்து அவர்களின் கோபத்தை கூட்டியிருந்தனர். சியோக்ஸ்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சமயத்தில் சிறையிலிந்து தப்பி வந்த ஸ்டீல்ஃபிங்கர், டைகரின் ஆட்களைபோல வேடமணிந்து சியோக்ஸ்களின் தளபதியை போட்டுத்தள்ளிவிட்டு ஓடிவிடுகின்றனர். போச்சுவார்த்தைக்கு வரச்செய்து ஏமாற்றியதாக கொலை வெறி கொள்ளும் செவ்விந்தியர்களிடமிருந்து டைகரும் இரயில்வே ஊழியர்களும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் இந்த முதல் பாக கதை.

பாகம்.2. பரலோகப் பாதை

ஜெனரல் டாட்ஜின் இரயில்வே முகாம் சில மைல் தொலைவில் செவ்விந்தியர்களால் சுற்றிவளைக்கப் பட்டிருக்கிறது. அவர்களின் உணவு சேமிப்பு குடோனும் ஒற்றனால் தீயிடப்படுகிறது. பாதுகாப்பிற்கும் குறைவான ஆட்கள். இரண்டுவார சம்பள பாக்கியினால் இரயில் பாதை ஊழியர்கள் விரக்தியில் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் சற்று தொலைவில் உள்ள யூனியன் பஸிபிக்கின் ஸ்டேசன் அதிகாரியிடம் உதவி கோட்க செல்கிறது டைகர் & கோ.
அங்கு இரண்டு பக்கமும் இஞ்ஜின் பொருத்தப்பட்ட ஒரு இரயிலில் ஜெனரல் டாட்ஜ் முகாமிற்கு தேவையான உணவு, வெடிமருந்துகள், துப்பாக்கிகள், பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பள பணமான இரண்டு லட்சம் டாலர்கள் ஆகியவை எடுத்துவரப்படுகிறது. இதனை அறிந்த ஸ்டீல் ஃபிங்கர் செவ்விந்தியர்களுடன் ஒரு திட்டம் தீட்டுகிறான். அதன்படி இரயிலை தாக்கி ஆயுதங்கள் செவ்விந்தியர்களுக்கு பணம் ஸ்டீல் ஃபிங்கர் குழுவிற்கு. அதற்காக தண்டவாளத்தை தகர்த்தும் பாலத்தை வெடி வைத்தும் தகர்த்து விடுகின்றனர்.இதில் பணத்துடன் ஆற்றில் குதித்து தப்பிவிடுகிறார் டைகர். பணத்தை புதைத்துவிட்டு டைகர் முகாமிற்கும் ரெட்டும் ஜிம்மியும் ஸ்டேசனிற்கும் செல்கின்றனர்.

பாகம்.3.இரத்தத் தடம்.

பணத்தை திருடிவிட்டதாக பழி டைகர் மீது விழுகிறது. மேழும் செவ்விந்திய, ஸ்டீல் ஃபிங்கர் குழுவிடமும் மாட்டிக்கொள்கிறார். இவர்களிடமிருந்து தப்பி தன் அவப்பெயரை எவ்வாறு டைகர் துடைக்கிறார் என்பதை இந்த பாகத்தில் காணலாம்.

பாகம்.4. தலைகேட்ட தங்கத் தலையன்.

ஜெனரல் அலிஸ்டர் என்பவன் இந்த செவ்விந்தியர்களின் முற்றுகையை அறிந்து அவர்களை ஒழிக்க ஒரு பெரும் படையுடன் வருகிறான். இவன் ஒரு கருணையே இல்லாத போர் வெறியன். இந்த கடைசி பாகம் முழுக்க போர்தான். அமெரிக்க செவ்விந்திய போரை நாம் நேரில் நின்று பார்ப்பதை போன்ற ஒரு உணர்வை ஒவ்வொரு பக்கத்திலும் பார்க்கலாம்.

இதைப்போன்ற ஒரு வேகமான கதையை இதுவரை நான் படித்ததே இல்லை. சென்ட்ரல் பஸிபிக் கம்பெனியின் கைக்கூலியான ஸ்டீல் ஃபிங்கர் போடும் ஒவ்வொரு திட்டத்தையும் டைகர் முறியடிப்பதை படு புத்திசாலித்தனமா காட்டியிருப்பார்கள். இரயில் சேஸிங், போர் காட்சி, அட்டகாசமான வில்லன் என்று ஒரு கவ்பாய் வெர்ஸ்டன் ஆக்ஸன் படத்திற்கு தேவையான அணைத்தும் பொருந்திய ஒரு அருமையான காமிக்ஸ் கதை இது.


தங்கக் கல்லறை



அது அமெரிக்காவின் வண்மேற்கு. ஏதோ காற்றுகூட பற்றிக்கொண்டு எரிவதைப்போன்ற அனல்காற்று வீசும் அரிசோனாவின் சிறு நகரம். பெயர் பலோமிடோ. கொள்ளையர்களும் தங்க வேட்டையர்களும் சர்வ சாதாரணமாக சங்கமிக்கும் ஓர் இடம். அந்த நகரத்தின் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட தற்காலிக மார்ஷலாக வருபவர்தான் ராணுவ அதிகாரியான கேப்டன் டைகர்.

டைகரும் அவரது டெபுடியான குடிகார கிழவர் ஜிம்மியும் சீட்டு விளையாடும் வேலையில் குறுக்கே புகுகிறது ஒரு தோட்டா. இந்ந தோட்டாவின் காரணம் சலூனில் நடக்கும் சண்டையென்பதை அறிந்து அதை தடுக்கச்செல்கிறார் டைகர். அங்கே லக்னர் என்பவன் தங்கச்சுரங்கம் இருப்பதாக கூறி தன்னிடம் பணம்பறித்து ஏமாற்றிவிட்டதாகவும் அதனால் அவனை கொள்ளப்போவதாகவும் சொல்கிறான் பார்னட். இருவரையும் எச்சரித்து லக்னரை மட்டும் கைது செய்து சிறையில் அடைக்கிறார் டைகர். தங்கச்சுரங்கம் இருப்பது உண்மையென்றும் தன்னை விடுவித்தால் அதில் பாதியை டைகருக்கும் ஜிம்மிக்கும் தருவதாக லக்னர் கூறுகிறான். அன்று இரவு பார்னட் சில ஆட்களை அழைத்துக்கொண்டு லக்னரை போட்டுத்தள்ள மார்ஷல் அலுவலகத்திற்கு வருகிறான். ஆனால் கடைசி நேரத்தில் இதனை முறியடிக்கும் டைகர் அவர்கள் அணைவரையும் சிறையில் அடைக்கிறார்.

மறுநாள் காலை லக்னரை அழைத்துச் செல்ல வாரண்டுடன் வருகின்றனர் கோல் மற்றும் வாலி. இவர்கள் இருவரும் ஒரு வெகுமதி வேட்டையர்கள் ( பௌன்டி ஹன்டர்ஸ்). இவர்களுக்கு பயந்து கிழவன் ஜிம்மிக்கு புதையல் ஆசை காட்டி சிறையிலிருந்து ஜிம்மியுடன் தப்பிச்செல்கிறான் லக்னர். லக்னர் தப்பியதற்கு டைகரும் அவனது டெபுடியும்தான் காரணம் எனக்கூறிவிட்டு அவர்களை விரட்டிப்பிடிக்க வெகுமதி வேட்டையர்கள் விரைகின்றனர். தன்மேல் ஏற்பட்ட அவப்பெயரை துடைக்க டைகரும் கிளம்புகிறார்.
அந்த தங்கச்சுரங்கம் இருப்பது செவ்விந்தியர்களான அப்பாச்சேகளின் புனித பூமியில். அங்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் வந்ததில்லை என்று அப்பாச்சேக்கள் நம்புகின்றனர். அந்த இடத்தை காவல் காக்கின்றனர். இவர்கள் வெள்ளையர்களை கண்டாலே கொன்று அவர்களின் மண்டைத்தோலை உறித்துவிடுவார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் லக்னரும் ஜிம்மியும் தங்கத்தை எடுத்தார்களா, இவர்களை வெகுமதி வேட்டையர்கள் பிடித்தார்களா, கேப்டன் டைகர் இவர்களை பிடித்து தன் அவப்பெயரை துடைத்தாரா என்பதை இரு பாகங்களில் நமக்கு சொல்கிறது இந்த "தங்கக் கல்லறை " என்ற காமிக்ஸ் கதை. இந்தக்கதை முழுக்கவே பல திடீர் திருப்பங்களும் இறுதியில் ஒரு பயங்கர சஸ்பென்சும் நிறைந்த அட்டகாசமான காமிக்ஸாகும். கதையே இதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது. முழுவதும் சொன்னால் சுவாரஸ்யம் இருக்காது என்பதால் இத்துடன் நிறுத்திவிட்டேன். இதுதான் நான் முதன்முதலில் படித்த டைகர் கதையும்கூட.

Tuesday, August 30, 2016

டமால்-டுமீல்



இது கவ்பாய் பற்றிய ஒரு தொடர் பதிவு.
கவ்பாய்களுக்கும் எனக்குமான தொடர்பு என் சிறுவயதின் ஒரு மதிய வேலையில் முன்னும் பின்னும் அட்டையில்லாத உயிரைவிடும் நிலையிலிருந்த ஒரு பழைய ராணி காமிக்ஸ் கவ்பாய் கதையை படித்ததிலிருந்து ஆரம்பிக்கிறது. அன்றிலிருந்து இந்த கவ்பாய் பித்து பிடித்து பல கவ்பாய் படங்கள் பார்க்க ஆரம்பித்து நிறைய மொக்கை வாங்கியதுதான் மிச்சம். கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் கவ்பாய் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்துள்ளேன். அவற்றைபற்றிய ஒரு தொடர்தான் இது (தொடருமானுதான் தெரியல).

கேமரா கண்டுபிடித்த ஆரம்ப காலகட்டத்தில் சில நிமிடங்களே ஓடும் திரைப்படங்கள் எக்கச்சக்கமாய் வெளிவந்து கொண்டிருந்த சூழலில் எட்வின் போர்டர் என்ற இயக்குனர் 1903ல் த கிரேட் ட்ரெய்ன் ராபரி என்ற முழு நீள திரைப்படத்தை வெளியிட்டார். இது ஏதோ இரண்டு மணிநேர படம்னு நினைச்சிடாதிங்க பத்து நிமிடங்கள் மட்டுமே ஓடும் ஒரு ஷார்ட் ஃபிளிம்தான். அந்த காலகட்டத்தில் இது பெரிய படம்தான். இது ஒரு ஊமை படம். இதுல என்ன விசயம்னா இது ஒரு கவ்பாய் திரைப்படம். ட்ரெய்ன் மீது சண்டைகாட்சியெல்லாம் வைத்து பிரமாண்டமாக எடுக்கப்பட்ட உலக சினிமா வரலாற்றின் முதல் முழுநீள திரைப்படம். இன்றும் யூடியூபில் காணக்கிடைக்கிறது. இந்த படம் வெளிவந்து நான்கு வருடங்களுக்கு பிறகுதான் உண்மையான கவ்பாய் பிறந்தார் அவர் பெயர் ஜான் வெய்ன்.

கவ்பாய் உலகின் பொற்காலம் என்பது 1930லிருந்து 1970 வரைதான். அப்போதுதான் ஜான் வெய்னின் புகழ்பெற்ற கவ்பாய் படங்களான ஸ்டேஜ் கோச், த சர்ச்சர்ஸ், ரியோ ப்ராவோ, எல்டொரடோ போன்ற படங்கள் வந்து அவரை ஹாலிவுட்டின் அரசனாக்கியது. இதே காலகட்டத்தில் இத்தாலியை சேர்ந்த ஒரு மூவரணி தங்களது வித்யாசமான கவ்பாய் படங்களால் உலகை தாக்கி ஹாலிவுட்டை கைப்பற்றியது. இன்றுவரை உலகின் பல படங்களில் காப்பியடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் டாலர்ஸ் ட்ரையாலஜி என்ற கவ்பாய் காவியத்தை கொடுத்த இயக்குனர் செர்ஜியோ லியோனி நடிகர் கிளின்ட் ஈஸ்டுவுட் மற்றும் இசையமைப்பாளர் என்னியோ மார்கோனி ஆகிய மூவரணிதான் அது. இவர்களின் படங்கள் அல்லாது த வைல்டு பன்ச், த மேக்னிஃபிஸியன் செவன், ஒன்ஸ் அபான்ய டைம் இன் த வெஸ்ட், த டம்ப் ஸ்டோன், டான்சஸ் வித் வுல்வ்ஸ், ட்ரு க்ரிட், ஜாங்கோ அன்ஜெய்ன், த லோன் ரேஞ்சர் போன்று இன்றுவரை கவ்பாய் படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

நாட்கனக்கில் குளிக்காத அழுக்கேறிய உடலுடன் இடைபெல்டில் ரிவால்வரும் குதிரையின் சேனத்தில் வின்செஸ்டர் ரைஃபிலும் வைத்துக்கொண்டு, வறுத்தொடுக்கும் வெய்யிலிலும் வாட்டிவதைக்கும் குளிரிலும் ஓயாது தங்கத்தை தேடியலையும் இந்த கவ்பாய் உலகை கொஞ்சம் புழுதிபடாமல் எட்டிப்பார்ப்போம்.

பொதுவா கவ்பாய் கதைகள் நடப்பது அமெரிக்க உள்நாட்டு யுத்தம் நடந்த 1850களில்தான். அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களில் சியோக்ஸ், செயனி, நவாஜோ, அபாசே போன்ற பல்வேறு இனகுழுக்கள் இந்த கதைகளில் வருவார்கள். பெரும்பாலும் கெட்டவர்களாகவே சித்தரிக்கப்படும் இவர்களை அழித்தொழித்த வெள்ளையர்கள்தான் உண்மையில் கயவர்கள். இவர்கள் அணைவரும் நதிக்கரையோரங்களில் டென்ட் அடித்து வேட்டையாடி வாழ்பவர்கள். இவர்களின் ஒரு பிரிவினர் எதிரிகளை கொன்று அவர்களின் மண்டைத்தோலை முடியுடன் சிறிது வெட்டியெடுத்துச்செல்வது ( வெற்றியின் சின்னம்) வழக்கம். இவர்களின் நிலங்களை அபகரித்து அதில் ரயில் பாதை போடுவதால் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்குமிடையேஅடிக்கடி மோதல் ஏற்படும்.

அமெரிக்காவின் தொழில்வளர்ச்சிக்கும் அண்டை மாகானங்களை வளைத்துப்போடவும் நாடு முழுவதும் ரயில் பாதைகள் போடப்பட்டன. அதில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் தங்கவும் சரக்கடிக்கவும் சிறுசிறு நகரங்களும் அதில் மதுபான விடுதியான சலூன்களும் அதில் சண்டைகளும் தோன்றின. இந்த தொழிலாளர்களின் உணவு தோவைக்கு மாட்டு மந்தைகளையுடைய பண்ணைகளும் அவற்றை பாதுகாக்கவும் உருவானவர்கள்தான் கவ்பாய்கள்.

பொரும்பாலான கவ்பாய் நாயகர்கள் இந்த மாட்டுமந்தை கவ்பாயாகவோ, உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபடும் ராணுவ வீரனாகவோ, சிறுநகரத்தின் தலைவரான ஸெரிஃபாகவோ, ரேஞ்சராகவோ அல்லது வாண்டட் லிஸ்ட் கேடிகளை பிடித்துக்கொடுத்து பணம் பெரும் பௌன்டி ஹன்டராகவோ இருக்கலாம்.

தற்போது தமிழில் அப்படிப்பட்ட காமிக்ஸ் கதைகளை லயன்- முத்து காமிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இவர்கள் பெரும்பாலும் இத்தாலி, ஃபிரான்ஸ் மற்றும் பெல்ஜிய காமிக்ஸ்களை தமிழில் தருகின்றனர். அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நாயகர்தான் லெஃப்டினன்ட் ப்ளூபெர்ரி. தமிழில் " கேப்டன் டைகர் " என்ற பெயரில் அதகளம் செய்யும் இவர் அமெரிக்காவின் வட பகுதி ராணுவத்தை சேர்ந்தவர். ராணுவ யுக்திகளில் கைதேர்ந்தவர், வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்குமிடையேநடக்கும் சண்டைகளை தடுக்க நினைப்பவர். புதையல் தேடும் புலி. துப்பாக்கிகளின் தோழன். ஆனாலும் எதிரிகளிடம் தோற்கக்கூடிய சாத்தியமுடைய ஒரு சாதாரண நபராகத்தான் இவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
 இவரது கதைகளில் நான் முதன் முதலில் படித்த " தங்கக் கல்லரை" பற்றியும் டாலர்ஸ் ட்ரையாலஜி திரைப்படம் பற்றியும் அடுத்த பதிவில்.........




Saturday, August 27, 2016

நீதிக்கட்சி - Justice League


மார்வெல் காமிக்ஸ்கு அவெஞ்சர்ஸ் மாதிரி டிசி காமிக்ஸ்கு ஜஸ்டிஸ் லீக். ஆனால் உண்மையில் முதலில் வந்தது ஜஸ்டிஸ் லீக்தான் 1960ல். இதற்கு போட்டியாக மார்வெலால் 1961ல் ஆரம்பிக்கப்பட்டது ஃபெண்ட்டாஸ்டிக் ஃபோர். இது அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால 1963ல் உருவாக்கப்பட்டவங்கதான் அவெஞ்சர்ஸ். மார்வெல், அவங்களோட மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (MCU) மூலமா phase1, phase2, phase3னு படங்களை வெளியிடுராங்க. அதுபோல டிசி, அவங்க டிசி எக்ஸ்டண்டட் யுனிவர்ஸ் (DCEU) மூலமா இதுவரைக்கும் 3 படங்களும் இனிமே 8 படங்களும் 2020 வரைக்கும் வரப்பேகுது. அதுல முதல் படமா வந்தது மேன் ஆஃப் ஸ்டீல்.

பொதுவா மார்வெல் காமிக்ஸ் கதைகள் இலகுவா ஜாலியான முறையில் இருக்கும். ஆனா டிசி கதைகள் படுசீரியஸா இருக்கும். அதன்படி வந்த படம்தான் பேட்மேன் V சூப்பர்மேன். ஜஸ்டிஸ் லீக்கான மிக முக்கியமான அட்டகாசமான ஒரு தொடக்கம் தான் இந்த படம். பேட்மேனும் சூப்பர்மேனும் மோதிக்கொள்ளும் அந்த காட்சி The Dark knight returns-2 என்ற அனிமேஷன் படத்திலிருந்துதான் வச்சிருப்பாங்க. 3 மணி நேரம் ஓடும் எக்ஸ்டண்டட் வெர்ஷனில் திரையில் இல்லாத எக்கச்சக்க காட்சிகள் உண்டு முக்கியமா அந்த Flash டைம் ட்ராவல்ல வந்து பேட்மேனிடம் ஒரு மெசேஜ் கொடுக்குற சீனப்பத்தி பின்னாடி பார்ப்போம். இப்ப ஜஸ்டிஸ் லீக்ல இருப்பவர்களை பற்றி பார்ப்போம்.

1.பேட்மேன்

கிரிஸ்டேஃபர் நோலனின் பேட்மேன் ட்ரையாலஜி பார்த்தப்பக்கூட நான் பேட்மேனோட பெரிய ரசிகன் இல்ல. ஜார்ச் க்ளூனி, வால்கில்மர் நடிச்ச பழைய பேட்மேன் படம்லாம் பேட்மேனை ஓட்டுரதுக்காகவே எடுத்த மாதிரி இருக்கும். இந்த பேட்மேன் V சூப்பர்மேன் படத்தோட பேட்மேனதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் DC காமிக்ஸ் படிச்சதில்லை ஆனா டிசி அனிமேட்டட் படங்கள் நிறைய பார்த்திருக்கேன். அதனால இந்த பென் அப்லெக்தான் கனக்கச்சிதமா இருக்காரு. அதே சாம்பல் நிற உடை, அதே கரிய நெடிய உருவம், படு வேகமானவர், நிறைய கேட்ஜெட்களை பயன்படுத்துபவர், நடுத்தர வயதை தாண்டியவர். நோலனோட பேட்மேன் சூப்பர்ஹீரோ கிடையாது ஒரு சாதாரன மனுசன். சண்டையில் தோற்கக்கூடிய சாத்தியமுள்ளவர். யாரையும் கொல்லமாட்டார். பகலில் தோன்றக்கூடியவர். ஆனா இந்த பேட்மேனோ சண்டையில் அடி பிரித்தெடுப்பவர், தேவப்பட்டா போட்டுத்தள்ளவும் தயங்கமாட்டார். ஏன்னா இனிமே இவர் மோதப்போவது எல்லாம் சாதாரண ஆட்கள் அல்ல படுபயங்கர ஏலியன்ஸ்.

2.சூப்பர்மேன்

இவரப்பத்தி என்ன சொல்றது. இவரோட ஜட்டிய உருவியதே பெரிய விசயம்தான்.

3.ஒண்டர் வுமன்

இவங்கள ஏற்கனவே பார்த்துட்டோம்.

4. ஃபிளாஷ் (Flash)

ஜஸ்டிஸ் லீக் கதைகள் பொதுவா மூன்று நகரங்கள்ல நடக்கும். கோத்தம், மெட்ரோபொலிஸ், செண்ட்ரல் சிட்டி. இதுல ஃபிளாஷ் என்ற பேரி ஆலன் செண்ட்ரல் சிட்டியை சேர்ந்தவர். செண்ட்ரல் சிட்டி போலிசின் தடயவியல் நிபுணர். ஒரு விபத்தில் மின்னலால் தாக்கப்படும் பேரி ஆலன், உலகிலேயே மிக வேகமாக செயல்படும் மனிதனாக மாறுகிறார். எனவே இவர் ஒளியின் வேகத்தில் ஓடி காலப்பயணமும் செய்யக்கூடியவர். ஒரு தடவை இவரின் சிறு வயதில் இறந்த தன் தாயை, காலப்பயணம் செய்து காப்பாற்றிவிடுவார். அந்த ஒரு விசயத்துனால என்ன ஆகும்னா இவர் Flashஆ இருக்கமாட்டாரு. ப்ரூஸ் வெய்ன் இறந்து அவுங்க அப்பா தாமஸ் வெய்ன் பேட்மேனா ஆகிடுவாரு. ஒண்டர் வுமனும் அக்குவாமேனும் எதிரியாகி அடிச்சிகுவாங்க. இதோட முடிவு என்னனு Justice league The flash point paradox என்ற சூப்பரான  அனிமேஷன் படத்த பார்த்து தெரிஞ்சிகங்க.

பேட்மேன் v சூப்பர்மேன் படத்தில் இந்த ஃபிளாஷ் காலப்பயணம் செய்து பேட்மேனிடம் “ லூயிஸ் லென் தான் சாவி, அவகிட்ட ஜாக்கிறதையா இருங்க, எங்களையெல்லாம் கண்டுபிடிங்க” என்பார். இதன் பின்னர் உலகம் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் சூப்பர்மேனின் அரக்கப்படை பேட்மேனை கைது செய்யும். சூப்பர்மேன் பேட்மேனை கொன்றுவிடுவார். இந்த காட்சியோட அர்த்தம் என்ன? எதிர்காலத்தில், சூப்பர்மேனின் காதலியான லூயிஸ் லென்னை ஜோக்கர் கொன்றுவிடுவார். அதனால் சூப்பர்மேன் ஒரு அரக்கப்படைய திரட்டி பயங்கர வில்லனா மாறிடுவார். அப்படி நடக்காமல் தடுக்கத்தான் ஃபிளாஷ் பேட்மேனை சந்திப்பார்.

5.சைபோர்க் (Cyborg)

அவெஞ்சர்ஸ் கதையில் வரும் டெசரக்டைப்போல ஜஸ்டிஸ் லீக் கதைகளில் வரும் ஒரு வஸ்துதான் மதர் பாக்ஸ். இது ஒரு ஏலியன் கம்ப்யூட்டர். வேரு உலகங்களின் வாசலை திறக்கும் கருவி. மனிதர்கள், அமேஸான்ஸ், அட்லாண்டியன்ஸ் இவங்க மூனுபேரிடமும் ஒவ்வொரு மதர் பாக்ஸ் இருக்கும். ஒரு நாள் செண்ட்ரல் சிட்டில இருக்குற S.T.A.R. பரிசோதனைக்கூடத்தில் இந்த மதர்பாக்ஸை ஆராய்ந்து கொண்டிருக்கிறார் விஞ்சானி சைலஸ் ஸ்டோன். அங்க சைலஸ பார்க்க வரும் அவரது மகன் விக்டர் ஸ்டோன் மேல, மதர் பாக்ஸ் வெடித்து சிதறுது. இந்த விபத்தில் விக்டரோட பாதி உடல் அழிந்து மீதி உடலோட மதர் பாக்ஸின் பாகங்கள் இணைந்து ஒரு மனித எந்திரனா மாறிவிடுகிறார். அயர்ன் மேனைப்போல.

6. அக்வாமேன் (Aquaman)

இவர் கடல்களின் அரசர். இவர் சொல்வதை கடலும் கடல் உயிரினங்களும் செய்யும். கடல் கடவுலான பொசைடனின் சூலம் தான் இவர் ஆயுதம். பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடி கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் நகரத்தை ஒரு ராணி ஆள்ராங்க. அந்த ராணிக்கும் கலங்கரை விளக்க காவலரான ஒரு மனிதனுக்கும் பிறந்தவர் தான் ஆர்த்தர் கேரி. ராணிக்கு ஓரம்னு ஏற்கனவே ஒரு மகன் இருக்காரு. அவர்தான் அட்லாண்டிஸின் இளவரசன். அவரு நிலப்பரப்பின் மீது ஒரு நாள் போர்த்தொடுக்கிறார். அந்த இளவரசன தோற்கடிச்சி ஆர்த்தர் கேரி, கடல்களின் காவலனா அட்லாண்டிஸின் அரசனாகிறார். கிட்டத்தட்ட தோரோட கதைதான் இவரோடதும்.

7.க்ரின் லாண்டர்ன் (Green lantern)

க்ரின் லாண்டர்ன் படத்தை பார்க்கவும் ( எழுத அலுப்பா இருக்கு)
ஒரு விசயம் இருக்கு. டிசியோட க்ரின் லாண்டர்னா நடிச்ச ரெய்ன் ரெனால்ஸ் தான் இப்ப மார்வெலோட டெட்பூல். மார்வெலோட டேர்டெவிலா நடிச்ச பென் அப்லெக்தான் இப்ப டிசியோட பேட்மேன் .

இவங்க இல்லாம மார்ஷியன், ஷாஸம்னு சில சூப்பர் ஹீரோக்கள் அப்பப்ப ஜஸ்டிஸ் லீக்ல வருவாங்க.
இவங்க எல்லாரும் ஒன்னாசேர்ந்து டார்க் சைட் என்ற படுபயங்கர ஏலியன எப்படி அழிக்கிறாங்கனு ஜஸ்டிஸ் லீக் படத்த பார்த்து தெரிஞ்சிக்குவோம்.



Friday, August 19, 2016

பிகினி மோகினி (wonder woman) – ஓர் அறிமுகம்


கிரேக்க புராணத்தில் டைட்டன்ஸ், ஒலிம்பியன்ஸ்னு நிறைய குரூப் உண்டு. எல்லாரும் பங்காளிங்கதான். ( என்னதான் கிரேக்க புராணத்த விடிய விடிய விம்போட்டு விளக்கினாலும் ஹீராக்கு ஸியஸ் சித்தப்பானுதான் சொல்லுவீங்க ) அதுல ஒரு குரூப்தான் அமேஸான்ஸ். இவங்க எல்லாருமே பெண்கள்தான். தெமிஸ்கிரா என்ற தீவுதான் இவங்க நாடு. அந்த நாட்டோட ராணியான ஹிப்போலிட்டாவின் பொண்னுதான் இளவரசி டயானா (எ) ஒண்டர் வுமன் (எ) பிகினி மோகினி.
முன்னொரு காலத்துல போர்க்கடவுலான ஏரிஸ், தெமிஸ்கிரா மீது போர்த்தொடுத்தார். அந்த போர்ல ஏரிஸ் தோற்க்கடிக்கப்பட்டு சிறை சென்றார்.

பல நூரு வருடங்களுக்கு பின்னாடி, முதல் உலகப்போர் சமயத்தில் அமெரிக்க விமானப்படை வீரரான ஸ்டீவ் ட்ரவர சில ஜெர்மன் விமானங்கள் துரத்திவந்து விபத்தாகிடுது. தெமிஸ்கிரா தீவில் கரையேறும் ஸ்டீவ் ட்ரவர அதுவரை ஆண்களையே பார்த்திராத இளவரசி டயானா கைது செய்றாங்க. சாதாரண மனிதனான ட்ரவரால் எந்த ஆபத்தும் இல்லைனு முடிவுபண்ணி அவன அமெரிக்காவில் விட்டுவர டயானாவை அனுப்பிவைக்குறாங்க ராணி. இதுக்கு இடைல சிறையிலிருந்து தப்பிக்கும் ஏரிஸ் தனது சித்தப்பாவான பாதாள உலகின் கடவுளான ஹேடஸ் உதவியால் மிகப்பெரிய பேய்ப்படையை திரட்டிக்கிட்டு டயானாவை கொல்ல வர்றாரு. அமேஸான் படைகளின் மூலம் பேய்ப்படையை தோற்கடித்து ஏரிஸ கொன்னு இந்த உலகத்த டயானா எப்படி காப்பாத்துறாங்க என்பதுதான் 2009ல வந்த ஒண்டர் வுமன் அனிமேசன் திரைப்படத்தின் கதை.

இளவரசி டயானா கடவுளோட வாரிசு என்பதால் பல நூரு வருசம் வாழ்வாங்க. வயசே ஆகாது. போர்க்கலையில் வல்லவர். எதனாலையுமே  அழிக்க முடியாத கை காப்புதான் இவங்களோட ஆயுதம், கவசம் எல்லாம். இவங்ககிட்ட யாராலையுமே விடுவிக்க முடியாத ஒரு சுருக்கு கயிரும் இருக்கும். அதை வைத்து யார்ட்டேருந்து வேனும்னாலும் உண்மையையும் வரவைக்கலாம்.

2017ல வரப்போர ஒண்டர் வுமன் படத்துல புராணத்த ஒதிக்கிட்டு முழுக்க முதல் உலகப்போர மையமா வைத்து எடுத்துருக்காங்க. கேப்டன் அமெரிக்காவும் இவங்களும் ஒரே வருடத்தில் தான் (கேப்டன் அமெரிக்கா மார்ச் 1941, ஒண்டர் வுமன் டிசம்பர் 1941) அறிமுகம் ஆனாங்க. ரெண்டு பேருமே உலகப்போர்ல கலந்துதுகிட்டு இப்ப வரைக்கும் இருப்பவர்கள். இருவர் கையிலும் கேடயம்.

ஒண்டர் வுமன் ட்ரைலரே அட்டகாசமா இருக்கு. இவங்க எப்புடி ஜஸ்டிஸ் லீக்கோட இணையிராங்கனு படத்த பார்த்து தெரிஞ்சிகங்க.


அடுத்து ஜஸ்டிஸ்லீக் பத்தி விரிவா பார்க்கலாம்………………..