Friday, March 14, 2014

கரீபியன் கடற்கொள்ளையர்-இறந்தவனின் இதயம்

போர்ட் ராயல் துறைமுகத்தின் ஒரு மழைக்கால பகல்வேலையில் மழைத்துளிகளுக்கு போட்டியாய் அணிவகுத்து வருகின்றனர் பிரிட்டிஸ் கடற்படை வீரர்கள். அவர்களின் தலைவன் லார்ட் பெக்கட் பிரபு. இவனே போர்ட் ராயலின் புதிய நிர்வாகி. திருமணக்கோலத்தில் இருக்கும் வில் டானரையும் எலிசபெத்தையும் கைது செய்து , ஜாக்கிற்கு உதவிய குற்றத்திற்காக தூக்கிலிடும் வாரண்டுடன் வருகிறார். வில் டானரை மட்டும் விடுவித்து ஜாக்கின் திசைமானியை கொண்டுவந்தால் எலிசபெத்தை விட்டுவிடுவதாக கூறி வில்லை அணுப்பி விடுகிறார்.

அது ஒரு சிறைச்சாலை. பினந்திண்ணி காக்கைகளும் கழுகுகளும் கூண்டில் அடைக்கப்பட்ட உயிருள்ள கைதிகளை கொத்தித்திண்ணும் கொடுமையான இடம்.  அங்கு இறந்த கைதிகளின் சவப்பெட்டிகளை தூக்கி கடலில் எறிகின்றனர் இரு எம கிங்கிகர்கள். கடலில் விழுந்த ஒரு சவப்பெட்டியை கொத்திக்கொண்டிருக்கும் காகத்தை உள்ளிருந்து ஒரு துப்பாக்கி சுடுகிறது.  பெட்டியின் உள்ளிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டு உள்ளிருக்கும் இறந்த பிணத்தின் கையை பிய்த்து அதை துடுப்பாய் பயன்படுத்தி கடலில் செல்லும் அந்த உருவம் ஜாக் ஸ்பேரோவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும். அவன் அந்த சிறையிலிருந்து ஒரு சாவியின் வரைபடத்தை  கைப்பற்றி வருகிறான்.  அந்த சாவியின் மூலம் டேவி ஜோன்சின் இதயம் இருக்கும் பெட்டகத்தை திறக்கலாம். அதை வைத்து நூற்றாண்டு கடனை அடைப்பதே ஜாக்கின் திட்டம்.

பிளாக்பியர்ல் கப்பலை கிழக்கு இந்திய கம்பெனி மூழ்கடித்த போது அதனை மீட்டுக் ஜாக்கிடம் கொடுத்தவன் டேவி ஜோன்ஸ். அதன் பிரதிபலனாக ஜாக் பதிமூன்று ஆண்டுகள் கேப்டனாகவும் பின்னர் நூறு ஆண்டுகள் ஃபிளையிங் டச்மேன் கப்பலில் மாலுமியாகவும் இருக்க வேண்டும் என்பதே ஜாக் ஸ்பேரோவின் வட்டியில்லா கடன்.

யார் இந்த டேவி ஜோன்ஸ்!?

ஏழு கடல்களிலும் ஈடுஇணையில்லாத வலிமையும் வேகமும் கொண்ட கப்பலான ஃபிளையிங் டச்மேனின் கேப்டன்தான் டேவி ஜோன்ஸ்.  இந்த கப்பலுக்கு கேப்டனாக இருப்பவரின் இதயத்தை எடுத்து ஒரு பெட்டகத்தில் வைத்துவிட வேண்டும் இதுதான் இந்த கப்பலின் விதி. அந்த இதயத்தை யார் கொல்கிறாரோ அவரே அடுத்த கேப்டன். அவருக்கும் இதயம் இருக்காது. டேவி ஜோன்சின் பார்ட் டைம் வேலை கடலில் இறந்தவர்களை மறு உலகிற்கு அணுப்பிவைப்பது. இவனது கட்டுப்பாட்டில் உள்ள க்ராக்கன் என்ற படு பயங்கர கடல்மிருகத்தை வைத்து பல கப்பல்களை கபாலிகரம் செய்வதும் இவன் வேலைதான். இவனுக்கு ஒரு காதலியும் உண்டு மேலும் பத்து வருடங்களுக்கு ஒருமுறை தான் கரைக்கே வர முடியும். ஃபிளையிங் டச்மேனில் உள்ள மாலுமிகள் அணைவரும் நூறு ஆண்டுகளுக்கு அடிமையாய் இருப்பவர்கள். அவர்களுள் ஒருவர் வில் டானரின் தந்தையான பூஸ்ட்ரப் டானர். டேவி ஜோன்ஸின் ஆக்டோபஸ் முகமும் கொடுக்குக் கையும்  உருவாக்கிய விதம் செம, கற்பனையின் உச்சம் எனலாம்.
ஜாக் ஸ்பேரோவின் திசைமாணிக்கு ஒரு விசேச குணம் உண்டு. அது வட திசையை காட்டாது ஆனால் நாம் செல்லவேண்டும் என நினைக்கும் திசையை காட்டக்கூடியது. இதைக்கொண்டு  டேவி ஜோன்ஸின் இதயம் இருக்கும் இடத்தை அறிந்து அதை கைப்பற்றுவதன் மூலம் ஃபிளையிங் டச்மேனை அடையலாம். அதை வைத்து மொத்த கடற்கொள்ளையர்களையும் அழிப்பதே லார்ட் பெக்கெட் பிரபுவின் திட்டம்.

எலிசபெத்தை காப்பாற்ற ஜாக்கைதேடி வரும் வில் டானரிடம்  வரைபடத்தில் இருக்கும் சாவியை எடுத்து வந்தால் திசைமாணியை தருவதாக சொல்கிறான் ஜாக். சாவியை தேடி ஃபிளையிங் டச்மேன் கப்பலிற்கு செல்கிறான் வில். அங்கு தன் தந்தையை சந்திக்கிறான்.  டேவி ஜோன்ஸ் அசந்த நேரத்தில் அவனிடமிருந்து சாவியை திருடிச் செல்கிறான்.  அதை பயன்படுத்தி தன் தந்தையை விடுவிப்பதே வில் டானரின் திட்டம்.

கடைசியில் டேவி ஜோன்ஸின் இதயம் யாருக்கு கிடைத்தது என்பதே பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் - டெட்மேன்'ஸ் ஜெஸ்ட் திரைப்படத்தின் கதை. படு அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் காட்டுவாசிகளிடம் மாட்டிக்கொண்டு ஜாக் செய்யும் சேட்டைகள் பட்டைய கெளப்பும். இதில் முக்கியமான ஒன்று ஹன்ஸ் ஸிம்மரின் இசை. ஒற்றை வயலின் மட்டுமே தனி ஆவர்த்தனம் புரியும்.

                                                                                                             
                                                                                                         
                

0 Comments:

Post a Comment