Saturday, April 28, 2018

அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிடி வார்






மார்வெலோட  திட்டமிடல் திறமை எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கு உதாரணம் இந்த படம். கடந்த பத்து வருடங்களா ஒவ்வொரு ஹிரோவா அறிமுக படுத்தியது இந்த கதையை எடுப்பதற்குத்தான்.  அந்த கதையோ தனோஸ் கெஸ்ட், இன்ஃபினிடி கன்லெட், இன்ஃபினிடி வார்னு மிகப்பெரியது. அதனால் இரண்டு பாகமா எடுத்துருக்காங்க. இரண்டாவது பாகம் அடுத்த வருடம் வருகிறது. ஓகே இந்த படம் எப்படி இருக்கு?

ஒரு முழு படமே கிளைமேக்ஸா இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு இந்த படம். படத்தோட முதல் நிமிடத்திலிருந்து கடைசி நிமிடம் வரை எல்லா கட்சிகள்லையும் நீக்கமற நிறைந்திருப்பவர் தனோஸ், தனோஸ், தனோஸ் மட்டுமே. ஆரம்பத்தில் இருந்தே அவெஞ்சர்ஸ்கு, லோகி, ச்சிடாரி படை, ரோனன்னு ஒவ்வொரு ஆட்களா அனுப்பி தொல்லை கொடுத்தது இந்த தனோஸ் தான். இத்தனை வருடமா அவ்ளோ பில்டப் கொடுத்த அளவுக்கு இந்த வில்லன் இருக்கானா என்றால் இல்லை. அதுக்கும் மேலையே இருக்கான்.

ஆ வூனு கத்த மாட்டான். இடி இடினு சிரிக்க மாட்டான். அமைதியா நிதானமா  எதுக்கும் அலட்டிக்காம எல்லாவற்றையும் செய்யக்கூடியவன். ரொம்ப செண்டிமெண்டானவன். அழக்கூடியவன் அதே வேலை சூப்பர் ஹீரோக்களே பயந்து பதுங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்கு படு பயங்கரமானவன். இந்த பிரபஞ்சத்துக்கே நல்லது செய்யக்கூடிய அளவுக்கு இவனுக்கு ஒரு தீவிரமான சித்தாந்தமும் உண்டு. அத்தனை ஹீரோக்களையும் கதற விடுவான். சூப்பர் ஹீரோக்களுக்கான வில்லன் இப்படித்தான் இருக்க வேண்டும்.

இத்தனை ஹீரோக்களையும் கட்டி மேய்க்கிறதே பெரிய வேலை அதை கச்சிதமா ருஸோ சகோதரர்கள் செஞ்சிருக்காங்க. அந்தந்த ஹீரோவுக்கே உரிய தனித்தன்மையான காட்சிகள நல்லாவே எடுத்திருக்காங்க. குறிப்பா ஒரு ஹீரோவுக்கான அறிமுகம் எப்ப இருக்கனுமோ அப்ப இருக்கும் கேப்டன் அமெரிக்காவின் அறிமுகம்.

இந்த படத்திலிருந்து நான் ஒரு காட்சியைகூட சொல்லமாட்டேன் ஏன்னா ஒவ்வொரு காட்சியுமே விசில் சத்தத்தோட இருக்கையே அதிரும்படி தியேடர்ல கிடைக்கும் அனுபவத்தை ஒரு தடவையாவது அனுபவிங்க. இந்த படம் எல்லா வசூல் சாதனைகளையும் அடிச்சி நொருக்க போகுது அது மட்டும் நிச்சயம்.

படத்தில் ஒரே ஒரு போஸ்ட் கிரடிட் காட்சி உண்டு அதில் கேப்டன் மர்வெலுக்கான ஆரம்பம் காட்டப்படும்.

அப்புறம் ட்ரைலர்ல வந்த சில காட்சிகள் படத்தில் இருக்காது இது மார்வெலோட வழக்கமான வேலை தான். அடுத்த பாகத்துக்காக இனி ஒரு வருடம் கத்திருக்கனும் .








Wednesday, January 10, 2018

The Shape of Water – இது மனித காதல் அல்ல



இதுவரைக்கும் நான் எடுத்த படங்களெல்லாம் ஒரு சிறுவனின் மனநிலையில் எடுத்தது ஆனா இந்த படம்தான் ஒரு அடல்டா, உணர்ந்து எடுத்தது – இது சமீபத்திய பேட்டி ஒன்றில் கியர்மோ டெல் டோரா சொன்னது.
சொன்னதைப்போலவே இதுவரை அவர் படங்களில் இல்லாத நிர்வாண, உடலுறவு, பெண்னின் சுய இன்பக்காட்சிகள் இந்த படத்தில் உண்டு. ஆனா இதுக்காக மட்டும் அவர் அப்படி சொல்லல, இது ஒரு காதல்கதை என்பதால் சொல்லிருக்காரு. அதுவும் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.

எலிசா ஒரு அனாதை ஊமைப் பெண். சினிமா தியேடரின் மாடியில் ஒரு அறையில் வசிப்பவள். பக்கத்து அறையில் ஒரு வயதான ஓவியர். அரசாங்கத்தின் ரகசிய ஆராய்ச்சிக்கூடத்தில் கூட்டி,பெருக்கி சுத்தம் செய்யும் ஒரு சாதாரண நைட்ஷிப்ட் பனிப்பெண்.
அந்த ஆரய்ச்சிக்கூடத்தில் ஒரு நாள் ஒரு பெட்டி வருவதை பார்க்கிறாள். அதற்குள் ஏதோ ஒன்று அசைவதை கண்டு பயந்து சென்றுவிடுகிறாள். மறுநாள் அந்த அறையில் சிந்திக்கிடக்கும் ரத்தத்தை சுத்தம் செய்ய வரும்போதுதான் ’அதை’ முழுதும் பார்க்கிறாள். அது மீனும் மனிதனும் கலந்ததைப்போன்ற ஒரு விசித்திர ஜந்து. தென் அமெரிக்காவின் ஏதோ ஒரு ஆற்றிலிருந்து அதை பிடித்து வந்து ஆராய்ச்சி என்ற பெயரில் வதைத்துக் கொண்டிருந்தார்கள். அதை பார்ப்பதற்காகவே அந்த அறைக்கு அடிக்கடி வருகிறாள். அது சாப்பிட முட்டை தருகிறாள். இசை தட்டுக்களை ஒலிக்கச் செய்கிறாள். நடனமாடுகிறாள். அது கூடவே இருக்க விரும்புகிறாள்.

இந்த கதை நடப்பது அமெரிக்க-ரஷ்ய பனிப்போர் நடந்த 1960களில். அந்த ஆராய்ச்சிகூடதில் இருந்த மருத்துவர்களில் ஒருவர் ரஷ்ய ஒற்றர். இந்த ஆரய்ச்சிய பத்தி அடிக்கடி ரஷ்யாவிற்கு தகவல் கொடுக்கிறார். அந்த ஜந்துவ கடத்தனும் இல்லனா கொல்லனும்னு ரஷ்யா திட்டமிடுது. அமெரிக்காவும் அந்த ஜந்துவ கொன்னு பாகங்களை வெட்டி எடுத்து ஆராய முடிவு செய்றாங்க. எப்படியாவது அந்த ஜந்துவ காப்பாத்தனும்னு எலிசாவும் ஒரு திட்டம் போடுறா. இதுக்கு அப்புறம் என்ன ஆகுதுனு படத்தில் பாருங்க.

ஹெல்பாய் படத்தில் வரும் ஏப்ரஹாம் செப்பியனை போலதான் இந்த ஜந்துவும் இருக்கு. அதில் நடிச்ச டக் ஜோன்ஸ் தான் இதுலையும் நடிச்சிருக்காரு. இவர் டெல் டோராவின் ஆஸ்தான நடிகர். பான்’ஸ் லிபரிந்த் படத்தில் வரும் Faun மற்றும் பேல்மேனும் இவர் தான்.
யுனிவர்சல் பிக்சர்ட்ட அவங்களோட கிரியேச்சர் ஆஃப் பிளாக் லகூன ரீமேக் பன்ன டெல் டோரா கேட்டிருக்கிறார். (அதுவும் இந்த மீன் மனிதனைப் போன்ற ஒரு ஜந்து தான்) இவரோட ஸ்கிரிப்டு அவங்களுக்கு பிடிக்காததால் நிராகரிச்சிட்டாங்க. அதனால space between us என்ற குறும்படத்தோட கதைய வச்சி இந்த படத்தை டெல் டோரா எடுத்துருக்காரு. இதனால இழப்பு யுனிவர்சல் பிக்சர்க்குதான். இரண்டு கோல்டன் குலோப் விருது வாங்கிருக்கு சிறந்த இயக்கம் மற்றும் இசைக்கு. ஆஸ்கர்லையும் விருது நிச்சயம்.

இந்த படம் கியர்மோ டெல் டோராவின் சிறந்த படம் கிடையாது. அவரோட பெஸ்டுனா அது Pan's.Labyrinth தான். அது ஒரு காவியம். மறுபடியும் அந்த படத்தைதான் பார்க்கத்தோனுது.