நாவல்களை நான் படிக்கத்தொடங்கிய காலத்தில் இந்திரா சவுந்தர்ராஜன்,ராஜேஷ்குமார் போன்றோரின் நாவல்களை படித்து முடிப்பதே எனக்கு பேரரசின் படங்களை முழுவதும் பார்ப்பதை போன்று கடினமாக இருந்தது. இந்நிலையில்தான் கல்கியின் பொன்னியின் செல்வனை படித்தேன் முடித்தேன். அன்றுமுதல் இந்நாவலை வருடத்திற்கு ஒருமுறை படிப்பதை வைபவமாய் வைத்திருக்கிறேன். சற்றே கிண்டலான சுவாரஸ்யமான அவரது எழுத்துநடையும் விருவிருப்பான கதையோட்டமுமே அவ்வளவு பெரிய நாவலை படிக்கமுடிந்தது. அதன்பின்னர் இந்த வரலாற்று வழியில் படையெடுத்தவர் அனேகம்பேர், அதில் வெற்றிபெற்றவர் வெகுசிலரே. சுஜாதாகூட இதில் தோல்விதான். இதில் பிரபலமான சாண்டில்யனின் கடல்புறாகூட விஜய்காக எழுதப்பட்ட ஒரு திரைக்கதையை போலவே எனக்கு தோன்றுகிறது. ஆழ்வார்கடியானைப்போல் இந்த அனபாயச்சோழன் ஏனோ மனதில் ஒட்ட மறுக்கிறார். சரி அதைவிடுங்க நான் சொல்லவந்தது கவிஞர் மு.மேத்தா எழுதிய ஒரு அருமையான வரலாற்று நாவலைப்பற்றி. 1982ல் விகடன் பொன்விழா சரித்திர நாவல் போட்டியில் முதற்பரிசு வென்ற " சோழநிலா " தான் அந்நாவல்.
கதை நடக்கும் காலத்தில் வீரபாண்டியனுக்கும் குலசேகரபாண்டியனுக்குமிடையே மதுரையின் சிம்மாசனத்திற்கு ஒரு இசைநாற்காலி போட்டியே நடக்கிறது. இவர்களுக்கு ஆதரவாக இலங்காபுரி தண்டநாயகர்கள் இருவர் வந்து தமிழகத்தையே அதகளம் செய்கின்றனர். கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்ட சோழநாட்டில் டம்மி ராஜாவின் ஆட்சியை கலைக்க பல்வேறு சதிகளும் நடக்கிறது. இத்தகைய ஒரு சூழலில் ஈடுஇணையற்ற ராஜதந்திரமும் வீரமும் கொண்ட சோழநாட்டு தளபதி திருச்சிற்றம்பலமுடையான் பெருமான் நம்பி பல்லவராயர் ( எவ்ளோ சின்ன பேரு), எப்படி இந்த சதிகளையேல்லாம் முறியடித்து குழோத்துங்க சோழனை அரசனாக்கினார் என்பதே இந்நாவலின் கதை. ஒரு சரித்திர நாவலை எப்படி சஸ்பென்சா எழுதமுடியும்னு இந்த நாவலை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
்
மு.மேத்தாவின் மற்றொறு அருமையான சரித்திர நாவல் "மகுடநிலா". இது பிற்கால சோழர்களின் பிரமாண்ட ஆட்சிக்கு முதன்முதலில் வித்திட்ட விஜயாலய சோழனும் அவன் மகன் ஆதித்தசோழனையும் பற்றியது.
இவ்விரு நாவல்களும் கவிதா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். ஆனால் தற்போது கிடைப்பது சந்தேகம்தான் மறுபதிப்பே இல்லையென நினைக்கிறேன். எட்டு வருடங்களுக்கு முன் நான் நூலகத்தில் படித்தபோது இப்பவோ அப்பவோ என உயிரைவிடும் நிலையில் இருந்தது. கதைமட்டும் இன்றும் உயிருடன் இருக்கிறது என்னுள்.